விமான நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.1.66 லட்சம் மோசடி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விமான நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.1.66 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-04 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவர் வேலை விஷயமாக இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் இவரை தொடர்பு கொண்ட நேகா என்ற பெண், தான் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கிரவுண்ட் ஸ்டாப் (விமான நிலைய தரைத்தள ஊழியர்) வேலைக்கு தேர்வாகி உள்ளதாக கூறினார். மேலும் அப்பெண்ணிடம் உங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை வாட்ஸ்- அப் மூலம் அனுப்புமாறு நேகா கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும், நேகாவுக்கு தன்னுடைய விவரங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

பணம் மோசடி

அதன் பிறகு அப்பெண்ணை தொடர்புகொண்ட நபர்கள், நீங்கள் பணியில் சேருவதற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை, பதிவுக்கட்டணம் ஆகியவற்றுக்காக பணம் கட்டுமாறு கூறினர். இதனை உண்மை என நம்பிய அந்தப்பெண், தன்னுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம், அந்த நபர்கள் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு 19 தவணைகளாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 950-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு வேலை ஏதும் தராமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்