ரெயிலில் இருந்து விழுந்து பிலிப்பைன்ஸ் பெண் பலி காதல் கணவரிடம் போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காதல் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
ஓமலூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காதல் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெச்சல்லா ஆனி மரி (வயது 35). இவர் தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். இந்த ரெயில் சேலம் மாவட்டம் காருவள்ளி அருகே சென்றபோது ரெயிலின் படிக்கட்டு பகுதிக்கு சென்ற அவர் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.
அவர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததை பார்த்து அந்த ரெயிலுக்குள் இருந்த சிலர் கூச்சலிட்டு உள்ளனர். சில கி.மீ. தூரம் சென்ற பின் அந்த ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் அங்கு சென்று ரெச்சல்லா ஆனி மரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் சந்தேகம்
ரெச்சல்லாஆனி மரி, ஹரிசை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் பெங்களூருவில் வசித்ததாகவும், எர்ணாகுளத்தில் வசிக்கும் ஹரிஷின் உறவினர்களை நேரில் சந்திக்க ரெச்சல்லா ஆனி மரி விரும்பியதால் ரெயிலில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ரெயிலில் இருந்து ரெச்சல்லா ஆனி மரி கீழே விழுந்து இறந்த சம்பவம் எப்படி நடந்தது? என்று ரெயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரிசிடம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி ரெயில்வே போலீசார் தரப்பில் கூறியதாவது:-
தள்ளி விட்டார்களா?
ரெச்சல்லா ஆனி மரி ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த சம்பவம் காலையில் நடந்துள்ளது. அவர் இயற்கை காட்சிகளை போட்டோ எடுப்பதற்காக ஓடும் ரெயிலின் கதவு அருகே சென்று உள்ளார். அப்போது அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் தானாக தவறி கீழே விழுந்தாரா? அல்லது யாராவது அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த சம்பவம் குறித்து பிலிப்பைன்சில் வசிக்கும் அவருடைய சகோதரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சேலம் வந்தவுடன் பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அந்த நாட்டின் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.