உளுந்தூர்பேட்டையில் திமுக கவுன்சிலரின் வீட்டிற்குள் புகுந்து தாய்-அக்காள் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. கவுன்சிலரின் வீட்டிற்குள் புகுந்து தாய்-அக்காள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-26 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார் கோவில் காலனியை சேர்ந்தவர் மனோபாலன்(வயது 32). இவர் உளுந்தூர்பேட்டை நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராகவும், நகராட்சி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மனோபாலன் வெளியில் சென்றிருந்தார். அப்போது திடீரென 10-க்கும் மேற்பட்ட கும்பல் இவருடைய வீட்டிற்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள், வீட்டில் இருந்த மனோபாலனின் தாய் சாந்தி(56), அக்காள் மஞ்சுளா தேவி(35) ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த சாந்தி, மஞ்சுளா தேவி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணனும், மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய்-மகளை தாக்கிய மர்மநபர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா?, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. கவுன்சிலரின் வீட்டிற்குள் புகுந்து தாய்-அக்காள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்