மார்த்தாண்டம்: சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட 13½ கிலோ கஞ்சா - பெண் உள்பட 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட 13½ கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-07 07:47 GMT

கஞ்சாவுடன் கைதான 2 பேர்

கன்னியாகுமரி:

தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தலை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து குமரி மாவட்ட போலீசாரும் கஞ்சா கடத்தலை ஒழிக்க கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் ஜங்ஷன் பகுதிகளில் தனிப்படை போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண் ஆகிய 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே போலீசார் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தி அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடமிருந்து 15 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றுடன் அவர்களை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மார்த்தாண்டம் அருகே கண்ணனூர் பூந்தோப்பு கொசக்குடிவிளையை சேர்ந்த மத்தியாஸ் மகன் ராஜேஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. அவருடன் இருந்த பெண் பெயர் அஜந்தா (38). திருவண்ணாமலை தொக்கவாடி பகுதியை சேர்ந்த ரகுவின் மனைவி என்பது தெரியவந்தது.

இவர்கள் மார்த்தாண்டம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சென்னையிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் மொத்தம் 13½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்