ஆரணி நகரில் போலீசார் குவிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஆரணி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாமீனில் வந்த மாவட்ட செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-29 22:04 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தின் பக்கத்து கடைக்கு சுவர் ஓட்டையிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் இருதரப்பினரை இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது பாஸ்கரன் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி கண்டித்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடந்த 8-ந் தேதி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

ஜாமீனில் வந்தார்

பின்னர் கோர்ட்டு மூலமாக ஜாமீன் பெற்று கடந்த 26-ந் தேதி பாஸ்கரன் வெளியே வந்தார்.

இந்த நிலையில் அவர் உள்பட 50 பேர் ஆரணி நகரில் டவுன் போலீஸ் நிலையம் முன்பும், நகரின் முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரை ஒருமையிலும், ஆபாசமாகவும் பேசியபடி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

போலீசார் குவிப்பு

அதனைத்தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணியில் குவிக்கப்பட்டனர்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வினோத் (வயது 35), பொன்னுரங்கம் (48), சார்லஸ் (47) பாக்யராஜ், (42) கார்த்தி (30) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

50 பேர் மீது வழக்கு

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஸ்கரன் மற்றும் 50 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஜாமீனில் வெளிவந்த பாஸ்கரன் தினமும் காலை 10 மணிக்கு ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 நாட்களாக அவர் கையெழுத்து போட வரவில்லை என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனால் ஆரணி நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்