கள்ளக்காதலில் பிறந்தததால் கொன்றதாக புகார்; குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி போலீசார் சோதனை

சாணார்பட்டி அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் கொன்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டி சோதனை செய்தனர்.

Update: 2023-06-28 21:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து தனது 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதன் காரணமாக, அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை கொன்று வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் சாணார்பட்டி போலீசாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தான் குழந்தையை கொல்லவில்லை என்றும், 3 மாதத்தில் கருக்கலைப்பு ஏற்பட்டதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும், அதனை வீட்டின் அருகே புதைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையே குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்க்க போலீசார் முடிவு செய்தனர். அந்த இடத்தை இளம்பெண் போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

பின்னர் அங்கு திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் தமிழ்செல்வி, நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஆகியோர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள வாழைமரத்தின் அடிப்பகுதியில் தோண்டப்பட்டது. ஆனால் குழந்தை புதைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. இதனால் அந்த பகுதியில் கிடைத்த மண் மற்றும் புழுக்களை, மதுரை தடயவியல் துறையினர் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்