போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிப்பு

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டனர்.

Update: 2022-10-21 18:45 GMT

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டனர்.

நீத்தார் நினைவு நாள்

நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாளையொட்டி, பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கப்பல்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மேந்தர் சிங் ஆகியோர் உயிர் நீத்தோர் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

வீரமரணம்

கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர்கள் வீரவணக்க தினம்(நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

அதன்படி, நீத்தார் நினைவு நாளான இன்று(அதாவது நேற்று) அஞ்சலி செலுத்தப்பட்டது. மனித சமூகத்திற்காக போராடி உயிரிழந்தவர்களை யாரும் மறக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்

ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த ஒரு போலீஸ்காரனின் குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்திற்கு கலெக்டர் வழங்கினார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்