வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.5.72 கோடியில் காவல் கட்டளை கட்டுப்பாடு மையம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.5.72 கோடியில் காவல் கட்டளை கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
காவல் கட்டளை கட்டுப்பாடு மையம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் நிலையங்களை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். அப்போது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். மலைகிராமங்களில் இருந்து போன் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் அதுகுறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மலைக்கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தினை அவர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், வாகன எண்களை மாற்றி பலர் வாகனங்களை ஓட்டுகின்றனர். வீட்டில் உள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. பொய் வழக்குகள் போடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்பாடு அறையில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைவருக்கும் இதன் செயல்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
பின்னர் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் அவரிடம் கட்டுப்பாடு அறையின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுகையில், மாவட்ட எல்லைப்பகுதிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது. போலீஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் இங்கிருந்து கண்காணிக்கலாம். இந்த கட்டுப்பாடு அறை மூலம் மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளோம் என்றனர்.
ரூ.5 கோடியே...
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் வேலூரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து கட்டுப்பாடு அறையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஒன்றாக இணைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே அறையில் காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடு அறை சட்டமன்ற தொகுதி நிதி, அரசின் தன்னிறைவு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என மொத்தம் ரூ.5 கோடியே 72 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறை, தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட சுமார் 956 கேமராக்களும், காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள 270 கேமராக்கள், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை இங்கிருந்தே கண்காணிக்க இயலும்.
ரோந்து தீவிரப்படுத்தப்படும்
இதுதவிர மாவட்ட எல்லைப்பகுதிகள், சோதனை சாவடிகளையும் இங்கிருந்து கண்காணிக்க முடியும். நடமாடும் காவல் கட்டுப்பாடு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், திருவிழாக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களும் இந்த மையத்துக்கு நேரலை செய்யும் வசதியும் உள்ளது.
மேலும் இதில் புதிதாக வாகன விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகன பதிவெண்களை வைத்து முக்கிய சாலைகளில் நிறுவியுள்ள 93 கேமராக்கள் மூலம் கண்டறியலாம். மேலும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 83 கேமராக்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படத்தை ஒப்பீடு செய்து உடனே எச்சரிக்கை எழுப்பும் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறிந்து குற்றங்களும் தடுக்க ரோந்து தீவிரப்படுத்தப்படும்.
இந்த கட்டுப்பாடு மையம் மூலம் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுதல், விபத்து இல்லா சீரான போக்குவரத்தினை உறுதி செய்தல், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், ரோந்து வாகன செயல் திறனை அதிகரித்தல், அவசர அமைப்புக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல், கைதியை அழைத்து செல்லும் காவல் வாகனத்தின் இருப்பிடத்தை கண்காணித்தல், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.