மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2022-09-28 18:45 GMT

கடலூர்,:

டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்த இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்தன.

இதற்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

போலீசார் உஷார்

அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைச்சாவடிகளிலும் சந்தேகமான முறையில் வரும் நபர்களை தீவிரமாக சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.

இரவு நேர ரோந்துப்பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்கும் விடுதிகளிலும் சந்தேக மான முறையில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர். முக்கிய வழிபாட்டு தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்