விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும் போலீசார் அறிவிப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-08-19 17:29 GMT

ராணிப்பேட்டை

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி வரும் 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், அதன் பின்னர் வழிபாட்டிற்கு பிறகு சிலைகளை முறைப்படி நீர் நிலைகளில் எடுத்து சென்று கரைப்பது தொடர்பாகவும் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போலீசார் தெரிவித்ததாவது:-

கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடத்திலேயே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இவ்வாண்டு சிலைகளை வைக்கவேண்டும், விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு இரும்பு தகட்டினாலான கூரை அமைக்கப்பட வேண்டும். எளிதில் கரையக்கூடிய களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும். சிலைகளை அமைத்து மின் அலங்காரம் செய்ய வேண்டி இருப்பின் சம்பந்தப்பட்ட மின்சார துறையினரிடம் இருந்து அனுமதி பெறப்பட வேண்டும். சிலை அமைக்கும் பந்தல் அருகில் தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட்ட வாளியை வைத்திருக்க வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

காவல்துறை தெரிவிக்கும் தினத்தன்று எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கும் வரை விழாக்குழுைவ சேர்ந்த குறைந்த பட்சம் 15 நபர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சிலையை இரவு, பகலாக பாதுகாக்க வேண்டும்.

ஊர்வலத்தில் செல்லும் இளைஞர்கள் பிறர் மீது கலர் பவுடர் வீசுவது மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை பீய்ச்சி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது,

வாணியம்பாடி மேளம் (டிரம்ஸ்) அடித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், மீறினால் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும், விழா குழுவினரின் பாதுகாப்பு கருதியும், உயிர் சேதங்களை தவிர்க்கவும் மாலை 6 மணிக்கு மேல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதியில்லை. அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன் அடுத்த ஆண்டில் விழா நடத்த அனுமதி மறுக்கப்படும். மேற்கண்டவாறு போலீசார் ெதரிவித்தனர்.

கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, ஜான் சேவியர் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்