புதிய வாகனச் சட்டப்படி போலீசார் நடவடிக்கைசாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்ஏற்புடையதா? வாகன ஓட்டிகள் கருத்து

புதிய வாகன சட்டப்படி சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசாரின் நடவடிக்கை ஏற்புடையுதா என்பது குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

Update: 2022-12-28 18:45 GMT

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல் களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

அபராதம் உயர்வு

அந்தப் புதிய வாகனச் சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்திலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பதிவு எண் மாற்றி அபராதம்

சிலம்பரசன் (ஆட்டோ டிரைவர், டொம்புச்சேரி):- போக்குவரத்து விதிகளை மீறும்போது அபராதம் விதிப்பதிலும் போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனர். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஒரு ஆள் ஏற்றினால் கூட சில நேரம் அபராதம் விதிக்கின்றனர். சீருடையை முழுமையாக அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றிச் செல்வதை போலீசார் கண்டுகொள்வது இல்லை. ஆட்டோ டிரைவர்கள் சில நேரம் கெஞ்சிப் பார்த்தால், குறைந்த அபராதம் விதிக்கிறோம் என்று கூறி ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அபராதம் விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன. உயர்த்தப்பட்ட அபராத தொகையை குறைக்க வேண்டும். கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.

அன்பழகன் (கூலித்தொழிலாளி, உப்புக்கோட்டை) :- போலீசார் ஏதோ இலக்கு வைத்து அபராதம் விதிப்பதாக பார்க்க முடிகிறது. வாகன தணிக்கையின் போது வாகனங்களை நிறுத்தாமல் சென்றால் அந்த வாகன எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அபராதம் விதிக்கின்றனர். சில நேரங்களில் சாலையோரம் நிழலில் நின்றுகொண்டு வாகனங்களை நிறுத்தாமல் பதிவு எண்ணை மட்டும் குறித்துக் கொண்டு அபராதம் விதிக்கின்றனர். அப்போது கவனக்குறைவாக வாகன பதிவு எண் மாறிவிடுகிறது. இதனால், வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளா போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விதிமீறல் வழக்குப்பதிவு செய்கின்றனர். இங்கே அப்படி நடைமுறையை கொண்டு வரலாம்.

பாரபட்சம்

விஜய் சாரதி (திருமண மண்டப ஊழியர், கம்பம்) :- வாகன தணிக்கையை பெரும்பாலும் காலை பள்ளி, அலுவலகங்கள் செல்லும் நேரத்திலும், மாலையில் பள்ளி, அலுவலகம் முடிந்து திரும்பும் நேரத்தில் மேற்கொள்வதை அதிகம் காண முடிகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் வாகன தணிக்கை செய்வது இல்லை. இரவில் தான் தணிக்கை அதிகம் செய்ய வேண்டும். அப்போது தான் திருட்டு, வழிப்பறியை தடுக்க முடியும். வாகன தணிக்கையில் போலீஸ் கெடுபிடி அதிகம் உள்ளது. அபராத தொகையை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்க வேண்டாம். பெரும்பாலும் ஏழை, எளிய மக்களின் மீதே அபராதம் விதிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கிறது.

கோவர்த்தனன் (என்ஜினீயர், ஆண்டிப்பட்டி) :- சாலை போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிப்பது மக்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்று சொல்லலாம். உண்மையில் மக்களின் உயிர் மீது அரசுக்கு அக்கறை இருப்பதாக சொன்னால், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த கையோடு, அதே விலைக்கு ஒரு ஹெல்மெட் கொடுத்து அனுப்ப வேண்டும். அபராதம் செலுத்திய பிறகும் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் தான் பயணம் செய்கிறார்கள். ஹெல்மெட் கொடுத்தால் பாதுகாப்பாக செல்வார்கள். இன்னும் இந்தியாவில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஹெல்மெட் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போதைய ஹெல்மெட்டை தொடர்ந்து அணிவதால் தலைவலி, கழுத்து வலி ஏற்படுகிறது. அபராதம் விதிக்கும் போது தெரிந்தவர்களை போலீசார் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற பாரபட்சம் காட்டக்கூடாது.

விபத்துகள் குறையும்

சஜூகுமார் (போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், போடி):- போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தான் அதிக அளவில் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். அரசு அபராதம் விதிப்பது என்பது மக்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுபவர்கள் யாருக்கும் போலீசார் அபராதம் விதிப்பது இல்லை. விதிகளை பின்பற்றுபவர்களுக்கு அவ்வப்போது பரிசுகள் வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

செல்போன் பேசிக்கொண்டே பலரும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்கள். போலீசாரை பார்த்த பின்னரும் செல்போனை வைக்காமல் இன்னும் வேகமாக செல்கிறார்கள். குற்றம் என்று தெரிந்தே பலரும் அதை செய்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நிறுத்தினால், 'என் உயிர் மீது எனக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு' என்று வாக்குவாதம் செய்கின்றனர். விதிகளை மக்கள் பின்பற்றத் தொடங்கி விட்டால் விபத்துகள் தானாக குறைந்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்