அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.46 ஆயிரத்தை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைத்த போலீசார்

அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.46 ஆயிரத்தை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைத்த போலீசார்

Update: 2023-05-01 22:02 GMT

கோவை மருதமலையை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 37). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் மாலையில் ஈரோட்டில் உள்ள தனது மாமனாரை பார்ப்பதற்காக கோவையில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ்சில் வந்தார். அவர் இரவு 7 மணிஅளவில் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்தார். பிறகு டவுன் பஸ் ஏறுவதற்காக சிறிது தூரம் நடந்து சென்றபோது தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 'மணிபர்ஸ்' காணவில்லை. அதில் அவர் ரூ.46 ஆயிரத்தை வைத்திருந்தார். உடனடியாக தான் வந்து இறங்கிய பஸ்சில் சென்று தேடி பார்ப்பதற்காக சென்றார். அதற்குள் அவர் வந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்று நித்தியானந்தம் புகார் அளித்தார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நித்தியானந்தம் வந்த பஸ்சின் கண்டக்டராக மோகனசுந்தரம் பணியில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, பஸ்சின் இருக்கைக்கு அடியில் பயணி ஒருவர் தவறவிட்டு சென்ற 'மணிபர்ஸ்' தான் எடுத்து பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட ரூ.46 ஆயிரத்தையும் நித்தியானந்தத்திடம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். உடனடியாக செயல்பட்டு பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கும், பணத்தை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்த கண்டக்டருக்கும் நித்தியானந்தம் நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்