சாத்தான்குளம் வழக்கில் பெண் போலீஸ் பரபரப்பு சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி நேற்று பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரத்த வாடை வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

Update: 2022-09-20 20:56 GMT


சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி நேற்று பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரத்த வாடை வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கில் சாட்சியாக சில போலீஸ்காரர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்

பியூலா செல்வகுமாரி

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முக்கிய சாட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பெண் போலீஸ்் பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்தார்.

பகல் 12 மணி அளவில் தொடங்கிய இவரது சாட்சியம் மாலை 5.30 மணி வரை நீடித்தது. இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமும் பியூலா செல்வகுமாரி மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடுமையாக தாக்கினர்

பியூலா செல்வகுமாரி நேற்று சாட்சியம் அளித்தபோது நீதிபதியிடம் கூறியதாக கூறப்படும் தகவல்கள் பின்வருமாறு:-

சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து வந்து, மாடியில் உள்ள அறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர்.

அப்போது ஜெயராஜ், "நான் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளேன். என்னால் வலி தாங்க முடியவில்லை" என்று கதறினார். இதனால் போலீஸ்காரர்கள் அடிப்பதை நிறுத்தினர்.

ஆனால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீஸ் நிலையத்தின் தரைத்தளத்தில் இருந்து கொண்டு, அவர்கள் இருவரையும் போலீஸ்காரர்கள் ெதாடர்ந்து அடிக்கிறார்களா? எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். மேலும் அவர்களை அடிக்கும்படி தூண்டி விட்டுக்கொண்டே இருந்தார். இதனால் மற்ற போலீஸ்காரர்கள் தந்தை, மகனை தொடர்ந்து தாக்கும் நிலை ஏற்பட்டது.. பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

ரத்த வாடை வீசியது

மறுநாள் போலீஸ் நிலையத்திற்கு உள்ளே வந்த போது ரத்த வாடை வீசியது. ரத்தக்கறைகளை பென்னிக்ஸ் உள்ளாடைகளை வைத்து, அவரையே இன்ஸ்பெக்டர் ஸ்ரீீதர் துடைக்க வைத்தார் என்றும் கேள்விப்பட்டேன்.

இவ்வாறு பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்