தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் நிலையங்களில்தேங்கியுள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைஆய்வுக்கூட்டத்தில் சூப்பிரண்டு பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் தேங்கியுள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்ட போலீசாரின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து போலீசார் கலந்து கொண்டு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அந்தந்த காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் எடுத்து உடனடியாக அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
வாகனங்கள் ஆய்வு
முன்னதாக தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து வாகனங்கள், வேன்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அந்த வாகனங்களின் தற்போதைய செயல் திறன் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் போதுமானதாக உள்ளதா? எனறும் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், நாகலிங்கம், மகாலட்சுமி, சிந்து மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.