மரக்காணம்- செங்கல்பட்டுவிஷ சாராய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

மரக்காணம்- செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2023-05-16 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 58 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மரக்காணம் விஷ சாராய பலி சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். அப்போது நிருபர்களிடம் கூறுகையில், மரக்காணம்- செங்கல்பட்டில் நடந்த விஷ சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்குகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து மரக்காணம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் இந்த 2 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கேட்டபோது, மரக்காணம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய முழு விவரங்களும் இன்னும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. ஓரிரு நாளில் எங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் நாங்கள் விசாரணையை தொடங்குவோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்