தாய், கள்ளக்காதலன்- 2 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது
தாராபுரம் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தாய், அவரது கள்ளக்காதலன் மற்றும் 2 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தாராபுரம் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தாய், அவரது கள்ளக்காதலன் மற்றும் 2 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அந்தப் பெண்ணின் கணவன் உடல் நலக்குறைவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு தனது குழந்தைகளுடன் கரையூரில் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துப்பாண்டி மிஸ்டு கால் மூலம் அறிமுகம் ஆனார்.
அதில் இருந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகி முத்துப்பாண்டி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் 3 குழந்தைகள் மற்றும் 2-வது கணவன் முத்துப்பாண்டியுடன் கரையூரில் வசித்து வந்தார். இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி அந்த பெண் மற்றும் 3 குழந்தைகளுடன் தூத்துக்குடி சென்று அங்கு வசித்து வந்தார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
இந்நிலையில் முத்துப்பாண்டிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த பெண் முத்துப்பாண்டியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவருக்கு அருகில் உள்ள படுக்கையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் பெர்னாண்டோ (50) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார் அப்போது அந்த பெண்ணுக்கும், சுரேஷ் பெர்னாண்டோவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் முத்துப்பாண்டியை விட்டுவிட்டு கள்ளக்காதலன் பெர்னாண்டோவுடன் அந்த பெண் கரையூர் வந்துள்ளார். அப்போது பெர்னாண்டோ இரவு நேரங்களில் அந்த பெண்ணின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அந்த சிறுமியின் தாய்க்கும் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கு செல்லவில்லை
இதில் மனம் உடைந்த 12 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் சிறுமி பள்ளிக்கு வராததை கண்டு வீட்டிற்கு வந்து அவர்கள் நிலை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அக்கம், பக்கத்தினர் அந்த பெண் செய்த லீலைகள் குறித்து கூறினர். இதை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சமூகநல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
4 பேர் கைது
அதன் பேரில் சமூக நல அலுவலர்கள் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கடந்த மாதம் 4-ந்தேதி அந்த சிறுமியின் தாய், சுரேஷ் பெர்னாண்டோ ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் பிறகு சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு சிறுமி வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்கு மூலத்தில், தனது தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடு்த்ததாகவும், அதற்கு உடந்தையாக தனது தாய் இருந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தப்பெண்ணின் தாய் மற்றும் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.