பா.ம.க. தொழிற்சங்கத்தில் 9 பேர் நீக்கம் திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. தொழிற்சங்கத்தில் 9 பேர் நீக்கம் செய்யப்படுவதாக திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் தொிவித்தாா்.

Update: 2022-10-07 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனத்தில் பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரவை தலைவர் நந்த கோபால் தலைமை தாங்கினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை பொதுசெயலாளர் ராமமுத்துக்குமார் வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பேசினார். அப்போது அவர் பேசுகையில், கட்சி என்றாலே தொழிற்சங்கம் தான் முதன்மை வகிக்கும். சில கட்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் தான் நிதியை வாரி வழங்கி வருகின்றன. பா.ம.க.வுக்கு எப்போதாவது தான் நிதி கேட்கப்படும்.

உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தலைமை தாங்கி எந்த இடத்திலும் போராடவும், அறிக்கை விடவும் தயார். என்னை போராட்டக்காரன் என்று சொன்னால், மகிழ்ச்சி அடைவேன். எனக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது. போராடுவதற்கு நான் தயார். நீங்களும் தயார்.

பா.ம.க. தொடங்கும் முன்பே, தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. சில களைகளை நீக்கியதால்தான் தற்போது தடைகளை தாண்டி சிறப்பாக நடைபெறுகிறது.

எங்களுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய படம் (ராமதாஸ்), டாக்டர் அன்புமணி ராமதாஸ் படம் கட்சி, தொழிற்சங்க பேரவை போன்றவற்றை கீழ்கண்டவர்கள் பயன்படுத்தக்கூடாது. இவர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதன்படி, அச்சரபாக்கம் ராமலிங்கம், கடலூர் ஜெயசங்கர், ராஜமூர்த்தி, விருத்தாசலம் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு பேருந்து முருகன், மாநகர போக்குவரத்து குப்பு ராஜ், கருணாநிதி, சிவகுமார், டாஸ்மாக் தொழிற்சங்க முன்னாள் பொறுப்பாளர் நக்கீரன் இளங்கோ உள்பட 9 பேர் நீக்கப்படுகிறார்கள் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் போக்குவரத்து இணை தலைவர் வீரமணி, டாஸ்மாக் பேரவை துணை பொதுசெயலாளர் ராமசுந்தரம், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நகர செயலாளர் ராஜேஷ், பூதேரி ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரவை பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்