பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியே இலக்கு

பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியே இலக்கு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.;

Update:2023-02-04 00:55 IST

வியூகங்களை அமைக்கிறோம்

அரியலூரில் நேற்று நடந்த பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

55 ஆண்டு காலம் அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து விட்ட நிலையில், 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றோம். பா.ம.க. வாக்கு வங்கி மேலும் மேலும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினை பற்றி நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை. அவர்கள் பிரச்சினையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் பா.ஜ.க. தலையீடு குறித்து, எவ்வித கருத்தும் எங்களுக்கு சொல்வதற்கு விருப்பம் இல்லை. அதானி நிறுவன வீழ்ச்சி தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து இதன் பின்னணியை முழுமையாக ஆராய வேண்டும். அடித்தளம் இல்லாத அந்த நிறுவனத்தில் எவ்வாறு எல்.ஐ.சி. முதலீடு செய்தது? வங்கி எவ்வாறு கடன் கொடுத்தது? போன்றவற்றை விசாரணை செய்தால் தான் தெரியவரும்.

தனிநபர் வருமானம் குறைந்திருக்கிறது

சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் உள்ள 40 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீத மக்களிடம் மட்டுமே குவிந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே சொத்துக்கள் குவிந்து, தொழில் நிறுவனங்கள் குவிந்திருப்பதை தடுத்து பரவலாக்க வேண்டும். ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 நிறுவனங்களுக்கு மேல் தொடங்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது, குறைகளும் இருக்கிறது. தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா, ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றின் காரணமாக, தனிநபர் வருமானம் மிகவும் குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு அதிக நிதி

ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி சேலம் - கும்பகோணம், ஜெயங்கொண்டம்-அரியலூர் வழியாக ெரயில் திட்டம், திண்டிவனம் - நகரி, தர்மபுரி - மொரப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கும் 8 ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதேபோல் 157 செவிலியர் கல்லூரிகளை தொடங்க இருக்கிறார்கள் என்பதை வரவேற்கிறோம்.

சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய நிதியை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 100 நாள் வேலை திட்டத்திற்கு தற்போது வெறும் ரூ.62 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதனை உயர்த்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டுக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கி தர வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை

2017-ம் ஆண்டு மதுரையில், ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஜப்பான் நாட்டின் நிறுவனமும் வரவில்லை. நிதியும் அறிவிக்கவில்லை. ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி, அதனை கட்டித் தர வேண்டும். குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கி ஆரம்ப கட்ட பணிகளை தொடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்