14-வது தவணை உதவி தொகையை பெறும் வகையில் பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கை புதுப்பிக்க சிறப்பு முகாம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு
14-வது தவணை உதவி தொகையை பெறும் வகையில் பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
ரிஷிவந்தியம்,
பிரதம மந்திரியின், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகையினை பெற்று பயனடைகின்றனர். இத்திட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த 17 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கே.ஒய்.சி. விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமலும், 8 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமலும் உள்ளது. இதனால் 14-வது தவணை உதவித் தொகையை விவசாயிகள் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் கே.ஒய்.சி. விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
கலெக்டர் ஆய்வு
இதில் சூளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விடுபட்ட விவசாயிகளை தொடர்பு கொண்டோ அல்லது அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்றோ கே.ஒய்.சி. விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் வங்கி கணக்குடன் ஆதார் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும் 14-வது தவணை உதவிதொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜூ, கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ், தனபால், வேளாண் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். இந்த முகாமானது தொடர்ந்து நடைபெறும் என்றும், இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.