நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது - கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2023-03-26 22:05 GMT

சத்தியாகிரக போராட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அராஜகம்

எங்களுடைய இளம் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ஒரு அராஜகத்தை மோடி அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த நாடு ஜனநாயக நாடு. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ள நாடு. எந்த தவறான விஷயத்தையும் ராகுல்காந்தி சொல்லவில்லை.கர்நாடகத்தில் எங்கேயோ பேசினார் என்று குஜராத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்தவரே வழக்கை நிறுத்தி வைக்கிறார். அதன் பின் அதை நடத்திய நீதிபதி மாற்றப்படுகிறார். புதிய நீதிபதி வந்த பின்பு, வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர்.

அடக்குமுறையை ஏவி வருகிறது

பொதுவெளியில் ராகுல்காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உள்பட யார் பேசினாலும் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்.ஆளுங்கட்சி பதில் சொல்ல வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை மோடி அரசு ஏவி வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது.

4 கேள்விகள்

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகளை கேட்க வேண்டும் என்று இருந்தார். 1. பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி எப்படி உடன் செல்கிறார்? அல்லது அதற்கு முன்பே எப்படி செல்கிறார்?, 2. பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியபிறகு அதானிக்கு எப்படி முதலீடு வருகிறது. 3. ஒரு நாட்டிற்கு நீங்கள் செல்லும்போது தனிநபருக்கு மட்டும் தொழில் தொடங்க வாய்ப்பு எப்படி வருகிறது?. 4. ஷெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி நிதி பரிவர்த்தனை நடந்தது எப்படி?. இந்த 4 கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதில் அளித்தால் பல்வேறு உண்மைகள் வெளிப்படும்.

இதனால் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசக்கூடாது என்பதற்காக நீதிமன்ற தீர்ப்பை காட்டி, பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் போல், இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஜனநாயகத்தை காப்போம்.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்திற்கான காரணம், சொத்தை காரணம். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மவுன போராட்டம்

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், சுதந்திரமான கருத்து தெரிவிக்க தடை விதிப்பதை கண்டித்து மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா பூட்டுடன் கூடிய கருப்பு துணியை வாயில் கட்டிகொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்