'மணிப்பூர் விவகாரம் குறித்து வேறு வழியில்லாமல் பிரதமர் பேசியுள்ளார்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மணிப்பூரை மட்டுமல்ல, இந்தியாவையே காப்பாற்ற முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-07-20 14:21 GMT

சென்னை,

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம். குற்றவாளிகள் என்றும் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து வேறு வழியில்லாமல் பிரதமர் பேசியுள்ளார் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மணிப்பூரை மட்டுமல்ல, இந்தியாவையே காப்பாற்ற முடியாது. மணிப்பூர் விவகாரம் குறித்து வேறு வழியில்லாமல் பிரதமர் மோடி பேசியுள்ளார். பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டத்தைப் பார்த்து பா.ஜ.க.வினர் அச்சமடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்