பிளஸ்-1 மாணவி தற்கொலை
தமிழ், ஆங்கிலம் பொதுத்தேர்வு எழுதிய நிலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈத்தாமொழி:
தமிழ், ஆங்கிலம் பொதுத்தேர்வு எழுதிய நிலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவி
நாகர்கோவில் அருகே ஈத்தாமொழியை அடுத்த மங்காவிளை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் புதூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா.
இவர்களுக்கு ராஷிகா (வயது 16), ஆஷிகா (14) என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ராஷிகா ஈத்தாமொழியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதற்கிடையே பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை ராஷிகா ஆர்வமுடன் எழுதி வந்தார். தமிழ், ஆங்கிலம் தேர்வை எழுதிய நிலையில் அடுத்த தேர்வுக்கு தயாராக இருந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் ராஷிகா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். தாய் மல்லிகா உள்பட குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து தாய் மல்லிகா வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ராஷிகா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த மல்லிகா கதறி அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து ராஷிகாவின் உடலை கீழே இறக்கி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
காரணம் என்ன?
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈத்தாமொழி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ராஷிகாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் ராஷிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.