குறுவை சாகுபடிக்காக வயலை உழும் பணி தீவிரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்,

Update: 2023-05-20 22:04 GMT

வல்லம்;

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்,

மேட்டூர் அணை திறப்பு

கடந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்னதாகவே தொடங்கினர். தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, சித்திரக்குடி, ராமநாதபுரம், கரம்பை உட்பட பல பகுதிகளில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.தற்போது மேட்டூர் அணையில் 100 அடி வரை தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் குறுவை சாகுபடிக்காக கடந்த ஆண்டு போல் இந்தாண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.

உழவுப்பணி

இதை பயன்படுத்தி தற்போது தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நிலத்தை உழும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வயலை தயார்படுத்துவதால் மேட்டூரில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்பட்டாலும் குறுவை சாகுபடியை உடனே மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதனால் வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். வயல்களில் இருந்த களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு ஆலக்குடி பகுதியில் உழவுப்பணி நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்காக தற்போது வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகள் விரைவாக தொடங்கி விடலாம் என்றும், மேலும் தற்போது வயலை உழுவதால் வயல் சமமாகி மேடு பள்ளமின்றி இருக்கும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்