தாயுடன் வீட்டின் முன் விளையாடிய சிறுவன் பாம்பு கடித்து சாவு

ஓட்டப்பிடாரம் அருகே தாயுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-05-21 19:00 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே தாயுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தான்.

5 வயது சிறுவன்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயியான இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு விக்ரம் (வயது 5) என்ற மகனும், யாழினி (7) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் தனது தாய் மல்லிகாவுடன் சிறுவன் விக்ரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, அங்கு வந்த நல்ல பாம்பு திடீரென்று விக்ரமை கடித்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதனால் விக்ரம் அலறி, தனது தாயிடம் காலில் ஏதோ ஒன்று கடித்ததாக தெரிவித்துள்ளான். இதையடுத்து மல்லிகா மற்றும் உறவினர்கள் அந்த இடத்தில் பார்த்தபோது நல்ல பாம்பு சென்று கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராஜ்குமார், மல்லிகா ஆகியோர் விக்ரமை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் விக்ரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பரிதாபம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டப்பிடாரம் அருகே தாயுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்