பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-03-16 20:31 GMT

கும்பகோணத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் விழிப்பணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கும்பகோணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் கும்பகோணம் மாநகராட்சி இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அன்பழகன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.

இதில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார், தாசில்தார் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், நகர்நல அலுவலர் பிரேமா, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை தலைவர் முத்துக்குமார் மற்றும் 480-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மஞ்சள் பை வழங்கும் எந்திரம்

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட்டில் தானியங்கி மூலம் மஞ்சள் பை வழங்கும் எந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயத்தை எந்திரத்தில் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி எந்திரம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து இந்த மஞ்சப்பை அல்லது துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதில் தாசில்தார் வெங்கடேஸ்வரன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சித்ரா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் சங்கத்தலைவர் சிவபுண்ணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்