மேரக்காய் பந்தல்களில் ஊடுபயிராக பீன்ஸ் நடவு

கோத்தகிரியில் மேரக்காய் பயிரிடப்பட்ட பந்தல்களில் ஊடுபயிராக விவசாயிகள் பீன்ஸ் நடவு செய்து உள்ளனர்.

Update: 2022-06-26 13:26 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் மேரக்காய் பயிரிடப்பட்ட பந்தல்களில் ஊடுபயிராக விவசாயிகள் பீன்ஸ் நடவு செய்து உள்ளனர்.

மேரக்காய் சாகுபடி

கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், ஓடேன் துறை போன்ற பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மேரக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேரக்காய் சாகுபடி செய்வதற்காக, விளைநிலங்களில் பல லட்சம் செலவில் பந்தல்களை விவசாயிகள் அமைத்து உள்ளனர். தற்போது அதே பந்தல்களை பயன்படுத்தி மேரக்காய் தோட்டங்களில் பீன்ஸ் ஊடு பயிராக பயிரிட்டு வருகின்றனர். ஒரே இடத்தில் 2 காய்கறி பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் மேரக்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், பீன்ஸ் மூலம் விவசாயிகள் நஷ்டத்தை ஈடுசெய்து வருகின்றனர்.

பீன்ஸ் நடவு

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மேரக்காய் பயிரிடுவதற்கு பந்தல்கள் அமைக்க கூடுதல் செலவாகிறது. மேரக்காய் நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு பராமரித்து வருகிறோம். இதனால் விளைநிலம் காலியாக இருப்பதால், ஊடு பயிர்களையும் பயிரிட்டு வருகிறோம். மேரக்காய் போன்று கொடியில் வளர்ந்து காய்க்கக்கூடிய காய்கறிகளில் பீன்ஸ் காய்கறியும் ஒன்று. பீன்ஸ் பயிரை சாகுபடி செய்ய, ஒவ்வொரு நாற்றுக்கும் உயரமான ஒரு குச்சி வீதம் நட்டு வைக்க வேண்டி உள்ளது.

குச்சிகளை பயன்படுத்தாமல் மேரக்காய்க்காக அமைக்கப்பட்ட பந்தல்களிலேயே பீன்ஸ் கொடிகளை படற விட்டு பயிர் செய்து வருகிறோம். இதனால் செலவு குறைவதுடன், மேரக்காய் மற்றும் பீன்ஸ் பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே விளைநிலத்தில் பயிரிட முடிகிறது. இதனால் ஏதாவது ஒரு காய்கறிக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு காய்கறியின் மூலம் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்