ஊட்டி மரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகள் தீவிரம்

கோடை சீசனுக்காக ஊட்டி மரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2023-03-12 18:45 GMT

ஊட்டி

கோடை சீசனுக்காக ஊட்டி மரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மலர் நாற்று நடவு பணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஜனவரி மாதத்தில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள்.

நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக பூங்காக்களில் மலர் நாற்று நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலையில் மரவியல் பூங்கா அமைந்துள்ளது. சுமார் 1.52 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் குளிர் பிரதேசங்களில் வளரும் தன்மை கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

இந்த பூங்காவிலும் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு ரக மலர் நாற்றுகள் பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பாத்திகளில் உரம் கலந்த மண் கொட்டப்பட்டு தயார் செய்யப்பட்டன. இவற்றில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர அலங்கார செடிகளை கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பனிப்பொழிவு உள்ள நிலையில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள், கோத்தகிரி தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்கு இடையே மரவியல் பூங்கா குறித்து சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவருக்கு தெரிவதில்லை என்பதால் அங்கு யாரும் வருவதில்லை எனவே மரவியல் பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்