5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் வழங்க திட்டம்

5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் வழங்க திட்டம்

Update: 2022-12-19 18:45 GMT

கோவை

பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

நிதி நிறுவன மோசடி

கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45), விவேக் (34) ஆகியோர் கோவையில் பைன் பியூச்சர் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். இந்த நிதி நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.850 வீதம் 60 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், 60 மாத முடிவில் முதலீட்டு தொகை ரூ.10 ஆயிரம் திரும்ப வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மேலும் ரூ.1 லட்சம் முதலீடு பெற்றுக்கொடுத்தால் ரூ.2 ஆயிரம் ஏஜேண்ட் கமிஷனாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அவர்கள் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்கப்படவில்லை. மேலும் அவர்களின் முதலீட்டு தொகையும் திரும்ப அளிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூ.189 கோடி மோசடி

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் 25,389 பேரிடம் ரூ.189 கோடிக்கும் மேல் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில் குமார், விவேக் ஆகியோரை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். தொடர்ந்து விவேக்கின் சகோதரர் நித்யானந்தன் கைது செய்யப்பட்டார். இந்த நிறுவனத்தின் கேஷியர் 2014-ம் ஆண்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டு (டான் பிட்) கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிதி மோசடி சம்பந்தமாக மொத்தம் 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகை

இந்த நிலையில் ரூ.189 கோடி மோசடி குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தயார் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை கோவை டான் பிட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் குற்றச்சாட்டப்பட்ட 47 பேருக்கும் 5 லட்சம் பக்கம் கொண்ட ஆவணங்களை தனித்தனியாக நகல் எடுத்து வழங்க வேண்டும் என்றால் ரூ.1 கோடிேய 75 லட்சம் செலவு ஆகும் என கண்டறியப்பட்டது.

இதையடுத்து குற்றப்பத்திரிகை நகல் எடுக்க ரூ.1 கோடியே 75 லட்சம் வழங்கக்கோரி அரசிடம் நிதி கேட்டு போலீசார் கடிதம் எழுதினர். ஆனால் அந்த தொகையை அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முறையிட்டனர்.

ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் இந்த கோரிக்கையை கோர்ட்டு ஏற்காமல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் போலீசார் மேல்முறையீடு செய்தனர். அங்கும் போலீசாரின் கோரிக்கை ஏற்கப்படாமல் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 47 பேருக்கும் 5 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்