மணக்குடி காயலில் படகுசவாரி விட திட்டம்-அமைச்சர் மனோ தங்கராஜ் ஒத்திகை

மணக்குடி காயலில் படகுசவாரி நடத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடந்த படகு சவாரி ஒத்திகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.

Update: 2023-06-10 21:53 GMT

நாகர்கோவில்:

மணக்குடி காயலில் படகுசவாரி நடத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடந்த படகு சவாரி ஒத்திகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.

அலையாத்தி காடுகள்

குமரி மாவட்டம் சுருளகோடு பகுதியில் தொடங்கும் பழையாற்று கால்வாயானது பல ஊர்களுக்கு தண்ணீர் வழங்கி விட்டு இறுதியாக மணக்குடியில் கடலில் கலக்கிறது. இந்த மணக்குடி காயல் மிகவும் அழகான இடமாகும். அங்கு அடர்த்தியாக வளர்ந்துள்ள அலையாத்தி காடுகளை எவ்வளவு நேரம் வேண்டுமானலும் கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கலாம். அதிலும் மணக்குடி பாலத்தில் நின்றபடி அலையாத்தி காடுகளையும், காயலை பார்க்கும் போது மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இந்த நிலையில் அலையாத்தி காடுகள் நிறைந்துள்ள மணக்குடி காயலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகுசவாரி விட திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக படகு சவாரி ஒத்திகை நேற்று நடந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவருடன் கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் படகில் சென்று ஒத்திகை பார்த்தனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

தனியார் பங்களிப்பு

புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவாளபுரம் வழியாக மணக்குடி கடலில் பழையாறு கால்வாய் சென்றடைகிறது. மணக்குடி காயலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் படகுசவாரி மேற்கொள்வது குறித்த ஒத்திகை நடந்தது. படகு சவாரியின் போது இயற்கை சூழலை உணர முடிந்ததோடு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகளை காண முடிந்தது. இக்காடுகள் வெள்ளப் பேரிடர்களை தடுக்கும் அரணாக திகழ்கிறது. ராம்சார் குறியீட்டில் இப்பகுதி ஈரநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வருகை தந்து, இனப்பெருக்கம் செய்வதற்காகவும், சூழியல்கேற்றவாறு பாதுகாப்பாக தங்குவதற்கு உதவி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஸ்குமார், லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முட்டம் கடற்கரையில் மேம்பாட்டுப்பணி

குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2 கோடியே 84 லட்சத்தில் மேம்பாட்டுப்பணி நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜே ஷ்குமார், பிரின்ஸ், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மேம்பாட்டு பணியை அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

முட்டம் கடற்கரையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் சிற்றார் 2 அணை பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ரூ.10.22 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலையில் லேசர் லைட் தொழில்நுட்ப பணியும், திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.4.30 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெற இருப்பதோடு, மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் சுற்றுலா மானிய கோரிக்கையில் ரூ.3 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அனுஷா தேவி, லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சந்திரா, மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்