பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு 18 படி அரிசியால் தயாரான முக்குறுணி கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

Update: 2023-09-19 18:45 GMT

திருப்பத்தூர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு 18 படி அரிசியால் தயாரான முக்குறுணி கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் திருநாளில் சூரசம்ஹாரம், 9-ம் திருநாளில் தேரோட்டமும், மூலவர் சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.

தீர்த்தவாரி உற்சவம்

10-ம் நாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10.30 மணிக்கு உற்சவர் கற்பகவிநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க மூஷிக வாகனத்தில் கோவிலை வீதி உலா வந்த கற்பக விநாயகர் திருக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு பிள்ளையார்பட்டி தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் அங்குச தேவருக்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்தனர். 10.45 மணிக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் அங்கிருந்து சுவாமி புறப்பட்டு கோவிலில் எழுந்தருளினார். தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சதுர்த்தி விழாவையொட்டி மூலவர் கற்பக விநாயகருக்கு 18 படி பச்சரியால் தயாரான முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

அன்னதானம்

நேற்று நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்