குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்

சாலை அமைக்கும் பணியின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-16 19:15 GMT

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் குடிக்காடு காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிநீருக்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை திடீரென்று பெருமத்தூர் குடிக்காடு-வைத்தியநாதபுரம் சாலை வழியாக வந்த ஒரு அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் இதுகுறித்து பெருமத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்