குப்பை கொட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு
கொள்ளிடத்தில் குப்பை கொட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் குப்பை கொட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.
ஆற்றங்கரையில் குப்பைகள் தேக்கம்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான முக்கிய வடிகால் ஆறாக கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு பகுதியில் கடலில் கலக்கிறது. கொள்ளிடம் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகே ரெயில் பாலத்தை ஒட்டி கொள்ளிடம் ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தடை விதிப்பு
ஆறும் மாசடைந்து வந்தது. மேலும் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டமும் நடத்தினர். நீர்வள ஆதாரத்துறை சார்பில் கொள்ளிடம் ஆற்றில் குப்பை கொட்ட கூடாது என தடை விதித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கியது.
இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், கனகராஜ், ஊராட்சி துணைத்தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலாளர்கள் ஸ்ரீதர், சோழராஜன் மற்றும் அதிகாரிகள் கொள்ளிடம் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இடம் தேர்வு
அதன்படி தூய்மை பணியாளர்கள் கொள்ளிடம் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை லாரி மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், 'கொள்ளிடம் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு விரைவில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும். அதற்கான பணி நடைபெற்று வருகிறது. சில நாட்களில் அந்த இடத்தில் அனைத்து குப்பைகளையும் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.