பேசமறுத்த காதலியை கத்தியால் குத்திய போட்டோகிராபர்

பேசமறுத்த காதலியை கத்தியால் குத்திய போட்டோகிராபர்

Update: 2022-07-11 15:11 GMT

கோவை, ஜூலை

கோவையில் பேசமறுத்த காதலியை கத்தியால் குத்திய போட்டோ கிராபர் கைதானார்.

இன்ஸ்டாகிராம் காதல்

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), போட்டோகிராபர். இவருக்கும் கோவையை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது.அந்த இளம்பெண் கோவையில் உள்ள ஒரு கார் விற்பனை ஷோரூமில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து பேசியதால் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் 2½ ஆண்டாக காதலித்து வந்தனர். தினமும் அவர்கள் பலமுறை செல்போன் மூலம் பேசி வந்தனர். இந்த நிலையில் தினேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்து உள்ளார்.இந்த நிலையில் நேற்று காலையில் கோவை வந்த தினேஷ், தனது காதலி வேலை செய்து வரும் கார் ஷோரூமுக்கு சென்றார். அங்கு இருந்த அவரிடம், ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டு உள்ளார்.

கத்திக்குத்து

அப்போது அவர்களிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம்பெண்ணின் முகம் மற்றும் முதுகு உள்பட 3 இடங்களில் குத்தினார். இதனால் வலியால் அவர் அலறித்துடித்தார். உடனே அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தினேசை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்