இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-04-18 18:54 GMT

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்

கரூர் தாந்தோணிமலை ராயனூர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பொதுமக்கள் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 434 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த முகாமில் வீடுகள் அரசினால் 1990-ம் ஆண்டு அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2013-2015 கால கட்டத்தில் சுமார் 60 வீடுகள் மட்டுமே அரசினால் கட்டப்பட்டன. ஏனைய வீடுகள் அனைத்தும் மக்கள் தாங்களாகவே கட்டி கொண்டனர். வீடுகள் அனைத்தும் கட்டப்பட்டு சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பெரும்பாலான வீடுகள் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன.

தொற்று நோய்கள் பரவும் அபாயம்

தமிழக அரசினால் புதிய வீடுகள் கட்டி கொடுப்பதாக பலமுறை அறிவிக்கப்பட்டும் இதுவரை வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. எதிர்வரும் மழைக்காலத்தில் மிகுந்த சிரமமாக இருக்கும். எனவே தற்காலிகமாக பழுதடைந்த வீடுகளை திருத்தம் செய்து கொடுக்க வேண்டும். முகாமிற்குள் வரும் மழைநீர் வெளியே செல்ல உரிய வடிகால் வசதி இல்லை. முகாமின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழைநீர் கிழக்கே முகாமிற்குள்ளேயே தேங்கும் நிலை உள்ளது.

இதனால் மழைக்காலத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் முகாமினை பார்வையிட்டு புதிதாக கழிவறை கட்டிட உத்தரவிட்டதன் பேரில் புதிய கழிவறைகள் கட்ட பணிகள் நடைபெற்றது. ஆனால் முகாம் மாற்றம் செய்யப்படும் எனக்கூறி கழிவறைகள் கட்டும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.

மருத்துவ காப்பீட்டு அட்டை

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கழிவறைகள் அனைத்தும், கழிவு குழிகள் நிரம்பியும், பழுதடைந்தும் உள்ளன. எனவே பழைய கழிவறைகளை கழிவு குழிகள் அகற்றி, திருத்தம் செய்து தர வேண்டும். தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை புதுப்பித்து கொடுக்கப்படுவதில்லை.

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கு கலெக்டர் செயல்முறை ஆணை பிறப்பிக்க வேண்டும் கூறுகின்றனர். இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்