மாட்டு வண்டி போட்டியில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு

மாட்டு வண்டி போட்டியில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் விஷ்ணுவிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-14 22:00 GMT

நெல்லை:

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில், அம்பையில் நடந்த மாட்டு வண்டி போட்டியில் பலியான நடுக்கல்லூரை சேர்ந்த மாடசாமி மகன் சிவசூரியன், மகள் செல்வராணி மற்றும் யூனியன் கவுன்சிலர் இன்பராஜ், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் ஆகியோர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து பேசினர். அப்போது மாடசாமியின் மனைவி மகாலட்சுமி பெயரில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

என்னுடைய கணவர் மாடசாமி என்ற மகாராஜன், கடந்த 5-ந் தேதி அம்பையில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் கலந்து கொண்டார். மாட்டு வண்டி ஓட்டிச்சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது வருமானத்தை நம்பியே எங்களது குடும்பம் இருந்து வந்தது. அவர் இறந்து விட்டதால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே எங்களது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்குவதுடன், எனக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்