பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதிய பள்ளி கட்டிடம்
திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 981 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு என 4 கழிவறைகள் மட்டுமே உள்ளது. போதிய இட வசதியின்றி மாணவ- மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டவும், விளையாட்டு மைதானம் அமைக்கவும் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள மாநகராட்சி இடங்களை வழங்கி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த ஆவன செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.
நிரம்பி வழியும் கழிவுநீர்
மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் கொடுத்த மனுவில், திருச்சி மாநகராட்சி 50-வது வார்டு ஆர்.சி. காம்பவுண்ட் தெருவில் ஏற்கனவே சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு நன்றாக உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் மீண்டும் அந்த சாலையில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். நன்றாக இருக்கும் சிமெண்டு சாலை மீது புதிதாக சிமெண்டு சாலை அமைக்க வேண்டாம். அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் வீடுகளில் உள்ள கழிவறைகளில் நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் வினோத், வேணுகோபால் கொடுத்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சட்ட விரோத பணிநீக்கம், பணியிடை மாற்றத்தை கைவிட வேண்டும். அரசாணை 367-யை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்து காணப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை சீரமைத்து 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜல்லிக்கட்டு
அரங்கன் பாதுகாப்பு பேரவையின் தலைவர் பிரகாஷ் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லூர் கிராமத்தில் உள்ள தர்ம சம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் இருந்த மாமரங்களை கடந்த 2018-ம் ஆண்டு கோவில் திருவிழாவின்போது தேரோடும் பாதையில் இருந்ததாக வெட்டினர். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது அந்த வெட்டப்பட்ட மாமரங்களை காணவில்லை. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
எடமலைப்பட்டிபுதூர் செட்டியப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு வருகிற மே மாதம் 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே எங்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து விதமான ஒத்துழைப்பு மற்றும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
361 மனுக்கள்
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து ெமாத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.