ஓமலூரில், அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பா.ஜனதா நிர்வாகிகள்
பட்டியலின மக்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த கோரி ஓமலூரில், அம்பேத்கர் சிலையிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
ஓமலூர்
சேலம் மேற்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் பாண்டியன், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் மகிழன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் கிருஷ்ணர் தேவராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் ஓமலூரில் அம்பேத்கர் சிலை பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஆட்சி புரிந்துள்ள திராவிட கட்சிகள் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்திற்கான துணைத்திட்டம் நிதியை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், மற்ற செலவினங்களும் செய்கின்றன. குறிப்பாக கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சமத்துவபுரம் என்ற பெயரில் பட்டியல் சமூக நிதியை எடுத்து செலவு செய்ததாகவும், 1997-1998-ம் ஆண்டில் ரூ.594.53 கோடியும், 1998-1999-ம் ஆண்டில் ரூ.509.70 கோடியும் செலவிடாமல் திருப்பி அனுப்பி தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். பட்டியல் சமுதாய மக்கள் இன்றளவும் இலவச வீட்டுமனை கேட்டும் வீடு இல்லாமலும் புறம்போக்கு, குட்டை புறம்போக்கில் வாழும் நிலையில் உள்ளனர். மேலும் சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாமலும் அவதியுற்று வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காமல் பின் தங்கி உள்ளனர். மத்திய அரசாங்கம் ஒதுக்கும் நிதியை செலவு செய்யாமல் ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.