இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்
திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்
மன்னார்குடி:
மன்னார்குடி ஒன்றிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 15-வது மாநாடு நேற்று மன்னார்குடி அருகே உள்ள ஏத்தகுடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சம்மேளனத்தின் ஒன்றியத்தலைவர் வனிதாதேவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். இதில் மாநாட்டு கொடியினை மூத்ததலைவர் மாலா பாண்டியன் ஏற்றிவைத்தார். தியாகிகளின் நினைவு சின்னத்தை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரவள்ளி திறந்துவைத்தார். முன்னதாக ஒன்றியக்குழு துணை தலைவர் வனிதா அருள்ராஜன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி பேசினார். மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், கட்சியின் துணை செயலாளர் ராகவன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தகுதியுள்ள முதியோர்கள் பலருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.