மாற்று இடம் வழங்கக்கோரி பெண்கள் மனு
மசினகுடியில் மின்வாரிய குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்டதால், குடியிருப்பு கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பெண்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
மசினகுடியில் மினவாரிய குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்டதால், குடியிருப்பு கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பெண்கள் மனு அளித்தனர்.
அரசு பஸ்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை, குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அதன்படி, கொலக்கம்பை அருகே உள்ள மேல் தைமலை பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மேல் தைமலை பகுதியில் 200 குடும்பங்கள் உள்ளனர்.
இப்பகுதியில் இருந்து தினமும் 70 பள்ளி மாணவ-மாணவிகள் கொலக்கம்பை, தூதூர்மட்டம், ஆறுகுச்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு படிக்க சென்று வருகின்றனர். மேல் தைமலை கிராமத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. வனவிலங்குகள் நடமாட்ட உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கொலக்கம்பை, ஆறுகுச்சிக்கு செல்லும் அரசு பஸ்களை மேல் தைமலைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாற்று இடம்
மசினகுடி பகுதியை சேர்ந்த வடிவுக்கரசி உள்பட 20 பெண்கள் கொடுத்த மனுவில், மசினகுடி கிராமத்தில் பைக்காரா மின் திட்ட பணிகளுக்காக தொழிலாளர்களாக கடந்த 1985-ம் ஆண்டு குடியமர்த்தப்பட்டோம். தற்போது பணி நிறைவடைந்து விட்டதால், நாங்கள் குடியிருந்து வரும் மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்யுமாறு மின்வாரிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
திடீரென அதிகாரிகள் காலி செய்ய சொல்வதால், நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 38 ஆண்டுகளாக இங்கு வசிப்பதால், எங்களது குழந்தைகள் ஊட்டி மற்றும் கூடலூர் பகுதியில் படித்து வருகின்றனர். எனவே, நாங்கள் வீடுகளை காலி செய்தால் குடியிருப்பு கட்ட மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கழிவுநீர் கால்வாயில் கட்டிடம்
மேலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெள்ளாடா கிராமத்தில் ஒருவர் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இந்த கட்டிடம் கட்ட முறையாக அனுமதி பெறவில்லை. எனவே, அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.