பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவரின் மனு: வழக்கு விவரங்களை அளிக்கும்படி கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவரின் வழக்கு விவரங்களை அளிக்கும்படி கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-04-24 21:04 GMT


குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர்சிங் என்பவர் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார், மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் போலீசார் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள். என்னுடைய 4 பற்கள் உடைக்கப்பட்டன. பிறகு என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதிவான வழக்கு விவரங்களை என்னிடம் வழங்கும்படி அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, எனது வழக்கு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திரம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, என் மீது பதிவான குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி இளங்கோவன் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்து இருந்தார்.

அதே நீதிபதி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மனுதாரர் அருண்குமார் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை கேட்டு அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்து, அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்