சிறு, குறு விவசாயிகள் பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

Update: 2022-06-27 19:38 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

விவசாயிகள் மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தனக்கலாங்காடு, ஆலாமரம், குதிரையாறு அணை சிறு, குறு விவசாயிகள் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பழனி தாலுகா ஆண்டிப்பட்டி கிராமம் தனக்கலாங்காடு, ஆலாமரம், இச்சலடி பகுதிகளில் பூர்வீக குடிகளாகிய நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.

இதுகுறித்து சப்-கலெக்டர், தாசில்தார், துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தனக்கலாங்காடு, ஆலாமரம், இச்சலடி பகுதிகளில் உள்ள அரசு உபரி நிலங்களை அளந்து பட்டா வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது இக்பால் கொடுத்த மனுவில், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே அரசு அறிவித்த 75 சதவீத கட்டண நடைமுறையை தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் கல்வீசி தாக்கியவர்கள், ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழாவில் பங்கேற்ற ஜான்பாண்டியன் உள்பட 28 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

காதில் பூ சுற்றி வந்த மாற்றுத்திறனாளி

கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு. இவர் நேற்று தனது இரு காதுகளிலும் பூவை சுற்றி கொண்டு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் கடந்த 4 ஆண்டுகளில் 685 முறை கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளேன். எந்த மனுவுக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் மனு கொடுக்கிறேன்.

தாண்டிக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வங்கி கிளை, பொதுசேவை மையம் திறக்க வேண்டும். மேலும் எனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 18-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன், என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்