வக்பு வாரியம் முடக்கிய சொத்துக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

வக்பு வாரியம் முடக்கிய சொத்துக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள் ளது.

Update: 2022-12-12 20:19 GMT

வக்பு வாரியம் முடக்கிய சொத்துக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள் ளது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்சி 21-வது வார்டு சொத்துரிமை மீட்புக்குழுவின் தலைவர் ஜாகீர் கொடுத்த மனுவில், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, ஜீவாநகர், வள்ளுவர் நகர், கல்யாணசுந்தரம், வயல் தெரு ஆகிய பகுதிகளில் வக்பு வாரியம் சொத்துக்களை முடக்கியுள்ளது. இதனால் எங்கள் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தடையை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நலவாரியம்

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் கொடுத்த மனுவில், அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது

திருச்சி 60-வது வார்டு பொதுமக்கள் சார்பில் முத்துசாமி கொடுத்த மனுவில், திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் எதிரே புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் இப்பகுதியில் அதிக குற்ற செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அனுமதிகொடுக்க வேண்டாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் கோபி சார்பில் கொடுத்த மனுவில், காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றனர். எனவே காவிரி பாலத்தின் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜானகி கொடுத்த மனுவில், மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தினக்கூலியிடம் கையூட்டு பெற்றுள்ளார். இது குறித்து கேட்ட போது என்னை தவறான வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

467 மனுக்கள்

மேலும் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நல திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவி தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 467 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்