மோகனூர் பகுதியில்'சிப்காட்' அமைக்க தடை விதிக்க வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் மனு

Update:2023-02-14 00:30 IST

மோகனூர் பகுதியில் 'சிப்காட்' அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் தொழில் துறையின் மூலம் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்க நிலம் எடுப்பதற்காக ஆய்வு பணியை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் அப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

அதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொழிற்பேட்டைக்கு ஆய்வு செய்யும் பகுதி முழுவதும் சமவெளியின்றி, மலைகளும், கரடுமுரடான பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் இருந்தே, மழைக்காலங்களில் நீர்வடிந்து கால்வாய்கள் மூலம் பெரிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் பயன்படுகிறது.

நீர்வழிப்பாதை சேதம்

நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறிகள், மக்காச்சோளம், பழத்தோட்டங்கள் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. சிப்காட் அமையும்போது, தண்ணீர் செல்லும் அனைத்து இடங்களும் அடைபட்டு நீர்வழிப்பாதை முற்றிலும் சேதமடைவதற்கு வாய்ப்பாக அமையும்.

இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சிப்காட் அமையும்போது, காற்றில் மாசு ஏற்பட்டு, சுற்றுப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு சிப்காட் அமைக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி சிப்காட் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்