வரகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடர்ந்து கடன் வழங்க நடவடிக்கை விவசாயிகள், கலெக்டரிடம் மனு
வரகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடர்ந்து கடன் வழங்க நடவடிக்கை விவசாயிகள், கலெக்டரிடம் மனு
எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எருமப்பட்டி ஒன்றியம் வரகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் கடந்த 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 70 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து வரவு, செலவுகளையும் வரகூர் கூட்டுறவு சங்கத்தில் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது வரகூரில் குடியிருந்து வருகிறோம். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலம் வருதராஜபுரம் எல்லையில் உள்ளது. இதனால் அவர்களை தேவராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் பெற்று கொள்ளும்படி வரகூர் கூட்டுறவு சங்கத்தினர் கூறுகின்றனர்.
வரகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல், தற்போது வரை அச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து வருகிறோம். இந்த நிலையில் தேவராயபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கின்றனர். இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் பல்வேறு ஆவணங்களை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். எங்களின் நிலையை கருத்தில் கொண்டு வரகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தொடர்ந்து வரவு, செலவு வைத்துக்கொள்ளவும், கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.