பெருந்துறை பேரூராட்சி மன்ற கூட்டம்: தலைவரை கண்டித்து தி.மு.க.- காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெருந்துறையில் நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் ராஜேந்திரனை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-28 22:05 GMT


பெருந்துறை

பெருந்துறையில் நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் ராஜேந்திரனை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

பெருந்துறை பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.சி.வி.ராஜேந்திரன் உள்ளார். மொத்தம் 15 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர். பெருந்துறை பேரூராட்சியில் கடந்த 4 மாதங்களாக நடந்த 3 மன்ற கூட்டங்களில் 4 தி.மு.க.வினர் மற்றும் 4 அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு, வருகை பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டு எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற ஆதரவு அளிக்காமல் தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 4-வது முறையாக பெருந்துறை பேரூராட்சி மன்ற கூட்டம் மீண்டும் கூடியது. இதில் மொத்தம் 13 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

வெளிநடப்பு

கூட்டம் தொடங்கியதும், தி.மு.க.வைச் சேர்ந்த சுப்ரீம்சுப்ரமணியம், நந்தகோபால், சித்திக்அலி, புஷ்பாசுப்பிரமணியம், சரண்யா ரமேஷ், பிரபாவதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் பஷ்ரியா பேகம் ஆகிய 7 பேரும், பேரூராட்சித் தலைவர் ராஜேந்திரனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி மன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

மேலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி செல்வராஜ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் காமராஜ், சண்முகம், நந்தினி ஆகிய 5 பேர் பேரூராட்சித் தலைவர் ராஜேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வெளிநடப்பில் கலந்துகொள்ள வில்லை. கூட்டத்தில் இருந்து மொத்தம் 7 பேர் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 43 தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால் பெருந்துறை பேரூராட்சி பகுதியில் எந்தவொரு வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் வெளிநடப்பு செய்யாத 2 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது ஆதரவு தி.மு.க.கவுன்சிலர்கள் 3 பேர் உள்பட 6 பேர் ஆதரவுடன் கூட்டத்தில் வைக்கப்பட்ட 43 தீர்மானங்களையும், நிறைவேற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நேற்று மாலை 5.30 மணி அளவில் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். பின்னர் பேரூராட்சித் தலைவரையும், செயல் அலுவலரையும் கண்டித்து அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார். இது இரவு வரை நீடித்தது. இதையொட்டி பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்