ஸ்ரீவைகுண்டம்தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் கொண்டாட அனுமதி

ஸ்ரீவைகுண்டம்தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மைப்பணி நடந்து வருகிறது.

Update: 2023-01-11 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் கொண்டாட நிபந்தனைகளுடன் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆற்றில் தூய்மைப்பணி நடந்து வருகிறது.

காணும் பொங்கல்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கு கீழுள்ள மணல் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்தோடு வந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வர். காலப்போக்கில் மணல் பகுதியில் முட்செடிகள் அதிகரித்து காணும் பொங்கல் அன்று குடும்பத்தோடு தாமிரபரணி ஆற்றில் விளையாடி மகிழ்வது மறைந்து போனது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறையினரின் முயற்சியால் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் காணும் பொங்கல், சித்திரை திருவிழா உணவு திருவிழா என பொதுமக்கள் கொண்டாடினர். தொடர்ந்து உரிய பராமரிப்பு இல்லாமல் முட்செடிகள் அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாடும் பழக்கம் தடைபட்டது.

வனத்துறையினர் அனுமதி

மீண்டும் இந்த பகுதியில் காணும் பொங்கலை கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ், எம்.எல்.ஏ. மற்றும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் தங்களது சொந்த நிதியில் இருந்து தாமிரபரணி ஆற்றை சீரமைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் பிருந்தா தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது, புதிதாக பாதை அமைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தூய்மைப் பணியை மேற்கொள்ள வனத்துறையினர் நிபந்தனையுடன் அனுமதி அளித்தனர்.

தூய்மைப்பணி தொடக்கம்

தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் முன் அனுமதி பெற்று நேற்று தூய்மை பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்