திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்...!

திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-25 08:43 GMT


மலையோரப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை நெருங்கியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 21-ந் தேதி மாலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அருவியில் சுற்றுல பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இதனால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவியின் மேல்பகுதியில் ஓடும் ஆற்றில் குளித்தனர். மேலும் அருவியை பார்த்து ரசித்து திரும்பினர்.

இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது மலைப்பகுதிகளில் மழைபெய்வதும் குறைந்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்தும் குறைந்து வருகிறது. இன்று மிதமான தண்ணீர் அருவியில் பாய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து வருகைதந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டுத்திரும்பினர்.

அருவியின் கடைசி பகுதியில் தண்ணீர் அதிகம் பாய்வதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக கயிறு வைத்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் திற்பரப்பு அணைக்கட்டில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்