தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது - திருமாவளவன்
இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணாமலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று விமானம் மூலம் திருச்சி சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டிசம்பர் மாதம் 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் தமிழக தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் இந்தியா கூட்டணி சார்பில் தேசிய அளவிலும் தலைவர்களையும் அழைக்க உள்ளோம்.
குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்களான இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சீதாராம்யெச்சூரி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
பா.ஜனதா கூட்டங்களில் பெரும்பாலும் அ.தி.மு.க., பா.ம.க.வினர்தான் பங்கேற்கிறார்கள். இதில் ஒரு சதவீதம் கூட பா.ஜனதாவினர் கிடையாது. அவர்கள் கூட்டணி கட்சி மற்றும் சாதி அமைப்புகளிடம் இருந்து ஆள்பிடிக்கிறார்கள்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் சிலை அகற்றப்படும். இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்றவும் முடியாது. அவர் பரபரப்புக்காக இவ்வாறு பேசி வருகிறார். இது தமிழ்நாட்டில் எடுபடாது.
தமிழ் உலகப்புகழ் பெற்ற மொழி. பிரதமர் மோடி வருவதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் தமிழ் பரவிவிட்டது. அண்ணாமலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு சிலர் ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.