பொன்னூஞ்சலில் எழுந்தருளிய பெரியநாயகி அம்மன்

திருவாதிரை உற்சவ விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Update: 2023-01-05 19:15 GMT

மார்கழி மாத திருவாதிரை உற்சவ விழா எல்லா சிவன் கோவில்களிலும் வெகுசிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் தான் நடராஜ பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவார்கள் என்பது ஐதீகம். அந்தவகையில் பிரசித்திபெற்ற பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரை உற்சவவிழா கடந்த மாதம் 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.


விழாவின் 9-ம் நாளான நேற்று இரவு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சன்னதி முன்புள்ள மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் எழுந்தருளிய காட்சியை காண சிவபெருமான் எழுந்தருளினார். பின்னர் கோவில் ஓதுவார் திருவெம்பாவை பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு நடந்தது. அதையடுத்து அம்மன், சிவபெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவபெருமான், அம்மன் தனித்தனி சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.


விழாவின் 10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வே ஆரூத்ரா தரிசனம் ஆகும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்