பெரிய மாரியம்மன் கோவில் மண்டல பூஜை
பெரிய மாரியம்மன் கோவில் மண்டல பூஜை கோவிலில் நடந்தது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஆனந்தகிரியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 9-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் 48-வது நாள் நிறைவு விழாவை தொடர்ந்து, மண்டல பூஜை கோவிலில் நடந்தது. இதையொட்டி டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இதில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். இந்த ஊர்வலம் ஏரிச்சாலை, நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, அண்ணா சாலை மூஞ்சிக்கல் வழியாக கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக விழா கமிட்டியினர், ஆனந்தகிரி இளைஞர் அணியினர், வேலப்பா பக்த சபையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாரி அன்னதான குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.